விவசாயி தோட்டத்தில் விளைந்த 5 அடி நீள மரவள்ளிக்கிழங்கு

நத்தக்காடையூர் அருகே விவசாயி ஒருவரது தோட்டத்தில் 5 அடி நீள மரவள்ளிக்கிழங்கு விளைந்து உள்ளது.

Update: 2021-06-10 21:40 GMT
முத்தூர்
நத்தக்காடையூர் அருகே விவசாயி ஒருவரது தோட்டத்தில் 5 அடி நீள மரவள்ளிக்கிழங்கு விளைந்து உள்ளது.
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள புதுவெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 70). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்திருந்தார். 
இந்த நிலையில் நேற்று காலை மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரி ஒருவரிடம் மொத்த கொள்முதல் விலைக்கு விலை பேசி கூலி ஆட்கள் மூலம் அறுவடை பணிகளை தொடங்கினார். இதன்படி மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணிகள் நடைபெற்றது. நேற்று காலை 11 மணிக்கு மரவள்ளிக்கிழங்கு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஒரு செடியின் வேரில் இருந்த மரவள்ளிக்கிழங்கு மட்டும் பக்கவாட்டில் மிக நீளமாக இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
5 அடி உயரம்
இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் அந்த மரவள்ளிக்கிழங்கை சேதப்படுத்தாமல் முழுவதுமாக தோண்டி வெளியே எடுத்தனர். இதில் அந்த மரவள்ளிக்கிழங்கின் நீளம் சுமார் 5 அடி உயரம் வரை நீண்டு வளைந்து வளர்ந்து இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டனர்.
இது குறித்து மரவள்ளிக்கிழங்கு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கூறியதாவது:-
நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களில், கிராமப்பகுதிகளில் வேளாண் வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அறுவடை பணிகளில் பொதுவாக சாதாரணமாக வளரக்கூடிய நிலையில் இருக்கும் மரவள்ளிக்கிழங்கு 2 அல்லது 3 அடி நீளம் வரைக்குமே இருக்கும். ஆனால் இங்கு அறுவடை செய்யப்பட்ட இந்த மரவள்ளிக்கிழங்கின் நீளம் 5 அடிக்கு வளர்ந்து உள்ளதை பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இயற்கை உரங்கள்
இது குறித்து விவசாயி தியாகராஜன் கூறுகையில், பொதுவாக என்னுடைய தோட்டத்தில் சாகுபடி செய்யும் அனைத்து பயிர்களுக்கும் ரசாயனம் கலந்த உரங்கள் பயன்படுத்துவது இல்லை. 
இயற்கை உரங்களை மட்டுமே அடி உரமாகவும், மேல் உரமாகவும் இடுவேன். இதனால் வேளாண் தோட்டத்து மண் நன்கு செழிப்பாக உள்ளதால் தற்போது சாகுபடி செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கு நன்கு வளர்ந்து நீளமாக உள்ளது என்றார்.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்த அக்கம்பக்கத்து விவசாயிகள், சுற்று வட்டார கிராம பொதுமக்கள் நேரில் வந்து அந்த 5 அடி நீள மரவள்ளிக்கிழங்கை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். 

மேலும் செய்திகள்