ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மது பாட்டில்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-11 03:59 GMT
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற சந்தேகத்திற்கு இடமான 3 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர்.

அவற்றில் கடத்த முயன்ற மொத்தம் 286 ஆந்திர மாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களில் மதுபாட்டில்களை கடத்த முயன்றதாக செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 26), ரவி (25) மற்றும் ராமச்சந்திரன் (30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களையும், மதுபாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர்.

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த மது பிரியர்கள் ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கனகம்மாசத்திரம் போலீசார் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் மடக்கி நிறுத்தினார்கள். போலீசார் சோதனை செய்தபோது அந்த இரு சக்கர வாகனத்தில் 400 ஆந்திர மதுபான பாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

போலீசார் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி வந்த சென்னை வடபழனியை சேர்ந்த விஜயரங்கன் (34), சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கிஷோர் குமார் (33) ஆகியோரை கைது செய்து திருத்தணி கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்