ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் கொலை செய்யப்பட்டாரா ? ஊழியர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் கொலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2021-06-11 05:13 GMT
சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா வார்டு இயங்கும் கட்டிடத்தின் 8-வது தளத்தில் அழுகிய நிலையில் பெண் உடல் கிடந்தது. அந்த பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் பிணமாக கிடந்த பெண், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 3-வது தளத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குரோம்பேட்டையை சேர்ந்த சுனிதா என்பது தெரியவந்தது. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மறுநாள் மாயமாகி உள்ளார்.

சுனிதா, மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர், பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கடைசியாக 31-ந்தேதி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில்தான் அந்த பெண்ணின் உடல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழுகிய நிலையில் மீட்கப்பட்டு, அவரது கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து, அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.

ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ள சுனிதா, எப்படி 8-வது தளத்துக்கு சென்றார்? என்ற மர்மம் நீடித்து வருகிறது. ஊழியர்கள் மட்டுமே செல்லக்கூடிய பகுதியில் அவர் எப்படி இறந்து கிடந்தார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஊழியர்களிடமும் போலீசார் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்