தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் கொரோனா குறைந்து வருகிறது அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் கொரோனா குறைந்து வருகிறது அமைச்சர் மதிவேந்தன் பேட்டி

Update: 2021-06-11 18:27 GMT
நாமக்கல்:
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
மருத்துவ உபகரணங்கள்
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.15 லட்சத்து 45 ஆயிரத்து 600 மதிப்புள்ள 23 பல்நோக்கு அளவு கண்காணிக்கும் திரைகள் வழங்கப்பட்டது. இவற்றை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி, இணை இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் மருத்துவ உபகரணங்களை டாக்டர்களிடம் வழங்கினார். இதன் மூலம் நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு, ரத்தஅழுத்தம், வெப்ப நிலை, இதயதுடிப்பு மற்றும் சுவாச அளவை பரிசோதிக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதில் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கொ.ம.தே.க. நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்காலிக பணி நியமன ஆணை
அதைத்தொடர்ந்து நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் திருநங்கை காயத்ரி ஸ்ரீக்கு பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கான தற்காலிக பணி நியமன ஆணையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். மேலும் கோவை அக்வாசப் என்ஜினீயரிங் நிறுவனம் சார்பில் ரூ.4 லட்சத்து 66 ஆயிரத்து 100 மதிப்பிலான 40 கே.வி. திறன் கொண்ட ஜெனரேட்டர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது. அப்போது நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) சித்ரா, துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம் மற்றும் டாக்டர்கள் சுகாதார அலுவலர்கள் உடன் இருந்தனர்.
லேசர் ஒளி
அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:- தமிழகத்தில் 1,000 சுற்றுலாதலங்கள் உள்ளன. முதல் கட்டமாக 295 சுற்றுலா தலங்களை தேர்ந்தெடுத்து அவற்றை மேம்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை இரவிலும் ஜொலிக்கும் வகையில் லேசர் ஒளி வசதி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பூம்புகாரில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதேபோல் சுற்றுலாத்தலங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் எவ்வாறு  மக்களிடத்தில் கொண்டு சேர்க்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் மு.க‌.ஸ்டாலினின் சீரிய முயற்சியாலும், நடவடிக்கையாலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்