பெட்ரோல்-டீசல் விலை உயர்வை எதிர்த்து மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-06-12 04:29 GMT
பொன்னேரி, 

மத்திய அரசின் பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இதற்கு காரணமான கலால் வரி உயர்வை எதிர்த்து மத்திய அரசை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மீஞ்சூர் பட்டமந்திரி ஆகிய இடங்களில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் தலைமை தாங்கினார்.

இதில் மீஞ்சூர் நகர தலைவர் துரைவேல்பாண்டியன், காட்டுப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். அதேபோல் பொன்னேரி பகுதியில் அடங்கிய தடபெரும்பக்கம், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் சதாசிவலிங்கம், செயலாளர் ஜெயபிரகாஷ், பொன்னேரி நகர் தலைவர் கார்த்திக், வட்டாரத் தலைவர் ஜலந்தர், பனப்பாக்கம் பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆரணி பெட்ரோல் பங்க் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ஆரணி பேரூர் நகர செயலாளர் டி.ஏழுமலை தலைமை தாங்கினார். தலைவர் அருண், முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஹேமபூசணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் பெட்ரோல் பங்க் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் வெங்கல் சிவசங்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் திருமலைசிவசங்கர் முன்னிலை வகித்தார்.

மேலும் செய்திகள்