கடலூரில், வீட்டு வாடகை கொடுக்க மறுத்ததால் தாக்குதல்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கடலூரில், வீட்டு வாடகை கொடுக்க மறுத்ததால் தாக்கப்பட்ட தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Update: 2021-06-12 17:11 GMT
கடலூர், 

கடலூர் புதுப்பாளையம் அய்யனார் கோவில் தெருவில் ரேவதி என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ராஜா என்கிற நாராயணமூர்த்தி (வயது 41). தொழிலாளி.

இந்த வீட்டில் ஏற்கனவே அதேபகுதியை சேர்ந்த நடராஜன் மகன் ராஜேஷ் என்கிற சண்முகசுந்தரம் (45) குடியிருந்து வந்துள்ளார். இதனால் ராஜாவுக்கும், ராஜேசுக்கும் பழக்கம் ஏற்பட்டு வந்தது.

வாக்குவாதம்

நேற்று முன்தினம் ராஜேஷ், ராஜாவிடம் வீட்டு வாடகை பணத்தை கொடு, நான் வீட்டு உரிமையாளர் ரேவதியிடம் கொடுத்துவிடுகிறேன் என்று கேட்டதாக தெரிகிறது. அதற்கு நானே நேரடியாகவே அவரிடம் பணத்தை கொடுத்து விடுகிறேன் என ராஜா கூறி உள்ளார்.இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டுக்கு வெளியே சென்ற ராஜேஷ் தவறிக் கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் கீழே கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து ராஜாவை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ராஜா சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சாவு

இது பற்றிய புகாரின்பேரில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர். இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து கடலூர் புதுநகர் போலீசார் ஏற்கனவே பதிவு செய்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்துகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்