கரூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை மீறிய 256 பேர் மீது வழக்குப்பதிவு

கரூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை மீறிய 256 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-06-12 17:58 GMT
கரூர் 
வாகன சோதனை 
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசர தேவைகளை தவிர்த்து வெளியிடங்களில் சுற்றித்திரியும் வாகனங்கள் ஆங்காங்கே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதோடு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதில், முககவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த 160 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.32 ஆயிரம், பொது இடங்கள் கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது சுமார் 8 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.4 ஆயிரம்  வசூலிக்கப்பட்டது.
200 லிட்டர் கள்ளச்சாராயம் 
அதேபோல, ஊரடங்கை மீறி இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 86 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டன. மேலும், மது பாட்டில்களை பதுக்கி விற்றதாக 2 வழக்குகள் பதியப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். 200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஊரடங்கை மீறியதாக 256 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்