6,800 தடுப்பூசிகள் ஒரே நாளில் தீர்ந்தது

தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் காட்டிய ஆர்வத்தால் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த 6,800 தடுப்பூசிகள் ஒரே நாளில் தீர்ந்தது.

Update: 2021-06-12 18:15 GMT
சிவகங்கை,

தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் காட்டிய ஆர்வத்தால் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த 6,800 தடுப்பூசிகள் ஒரே நாளில் தீர்ந்தது.

பொதுமக்கள் ஆர்வம்

கொரோனா நோய்தொற்றின் 2-வது அலையில் அதிக அளவில் மக்கள் நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் அதிக அளவில் இறப்பும் ஏற்பட்டது. இறப்பை தடுக்க தடுப்பூசி போடுவது ஒன்றுதான் சிறந்த தீர்வு என்று அரசு மற்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.
 மேலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டாலும் அவர்கள் விரைவில் குணமடைந்து விடுவார்கள் என்றும் தெரிந்தது. இதனால் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வத்துடன் முன் வந்தனர்.

6,800 ஆயிரம் தடுப்பூசி தீர்ந்தது

இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்திற்கு 1,200 கோவேக்சின் தடுப்பூசியும் நேற்று 5 ஆயிரத்து 600 கோவிஷில்டு தடுப்பூசியும் வழங்கப்பட்டது.
இந்த தடுப்பூசிகள் நேற்று காலை முதல் போடப்பட்டது. இந்த தடுப்பூசி அனைத்தும் நேற்று மதியமே தீர்ந்துவிட்டது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி கூறியதாவது:-
1¼ லட்சம் பேருக்கு தடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த மாவட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 804 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இவர்களில் முதல் தவணை தடுப்பூசி 1 லட்சத்து 5ஆயிரத்து 542 பேர் போட்டுள்ளனர். இவர்களில் 54 ஆயிரத்து 238 பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள்.
மேலும் 24 ஆயிரத்து 252 பேர் 2 தடவை தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நேற்று முனதினம் 1200 டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும் நேற்று 5 ஆயிரத்து 600 டோஸ் கோவிஷில்டு தடுப்பூசியும் இம்மாவட்டத்திற்கு வந்தது. இவை அனைத்தும் நேற்றே தீர்ந்து விட்டது.இதனால் மேலும் கூடுதலாக தடுப்பூசி கேட்டுள்ளோம். வந்ததும் மற்றவர்களுக்கும் போடப்படும்.
 இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்