வெண்ணந்தூர் அருகே காரில் மது கடத்தி வந்த 2 பேர் கைது 1,020 பாட்டில்கள் பறிமுதல்

வெண்ணந்தூர் அருகே காரில் மது கடத்தி வந்த 2 பேர் கைது 1,020 பாட்டில்கள் பறிமுதல்

Update: 2021-06-12 20:40 GMT
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே காரில் மது கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,020 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
கொரோனா 2-வது அலை காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சிலர் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவில் மதுபாட்டில்களை கடத்தி வந்து தமிழகத்தில் இருமடங்கு விலைக்கு விற்று வருகின்றனர். அவ்வாறு மதுபாட்டில்களை கடத்தி வரும்போது போலீசாரின் வாகன சோதனையில் பலர் கைதாகும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. 
இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே மல்லூர் பகுதியில் வெண்ணந்தூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரை போலீசார் நிறுத்தினர். இதையடுத்து காரில் போலீசார் சோதனை செய்தனர். அதில் 1,020 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 
கைது
பின்னர் காரில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சோம்நாத்புரம் பகுதியை சேர்ந்த பையன்னா மகன் டிரைவர் மஞ்சுராத் (வயது 28) மற்றும் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த பூபேந்திரன் (45) என தெரியவந்தது. 
இருவரும் மதுபாட்டில்களை ஓசூரில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு கடத்தி செல்ல முயன்றது அம்பலமானது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, காரையும் பறிமுதல் செய்தார். கைதான பூபேந்திரன் காய்கறி வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்