சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்

சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் தலைமையில் நடந்தது.

Update: 2021-06-13 06:43 GMT
சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வல்லுனர் குழுவினருடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தொற்று குறைந்து வந்தாலும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்திடவும், மருத்துவ வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தற்போது நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைக்காமல் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளவும், மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழிர்களுக்கு அடிக்கடி ஆர்.டி.பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.

மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் கணக்கெடுப்பு செய்து, அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா? என்பதையும் கேட்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் வணிக வரித்துறை முதன்மை செயலாளர் எம்.ஏ.சித்திக், மாநில கொரோனா கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு அலுவலர் டாக்டர் தரேஷ் அகமது உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்