அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு 72 ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக வழங்கிய வருவாய் கோட்டாட்சியர்

அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட 72 ஆக்சிஜன் சிலிண்டர்களை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கிய வருவாய் கோட்டாட்சியருக்கு டாக்டர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2021-06-13 12:01 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆக்சிஜன் சிலிண்டர் குறைவாக இருப்பதால் மிகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையை போக்குவதற்காக வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன், அமெரிக்காவில் உள்ள அவரது நண்பர் ஆனந்தகணேஷ் பாபு என்பவரை தொடர்பு கொண்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் பலர் சிரமப்பட்டு வருவதாகவும், ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து தர வேண்டும் என செல்போனில் தெரிவித்துள்ளார்.

72 ஆக்சிஜன் சிலிண்டர்கள்

இதை தொடர்ந்து அவரது நண்பர் சொந்த செலவில் அமெரிக்காவில் 72 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் அதற்கு தேவையான ரெகுலேட்டர் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன் தனது சொந்த செலவில் வாகனம் ஏற்பாடு செய்து 72 ஆக்சிஜன் சிலிண்டரை வேதாரண்யத்துக்கு கொண்டு வந்தார். பின்னர் இந்த 72 ஆக்சிஜன் சிலிண்டரையும், வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு இலவசமாக நாகை கலெக்டர் பிரவீன் நாயர் முன்னிலையில் வழங்கினார்.

அமெரிக்காவில் இருந்து வரவழைத்து ஆக்சிஜன் சிலிண்டரை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கிய வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகனுக்கு டாக்டர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கலெக்டர் ஆய்வு

முன்னதாக கலெக்டர் பிரவீன்நாயர் வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் அமைக்கப்பட்டு வரும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு அவர் கூறுகையில், நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத மாவட்டமாக நாகை மாவட்டம் உள்ளது. அடுத்த வாரம் கொேரானா தடுப்பூசி அனைத்து மருத்துவமனைக்கு வந்து விடும் என்றார்.

மேலும் செய்திகள்