2 கன்றுகளை விற்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாற்றுத்திறனாளிக்கு கறவை மாடு வாங்க ரூ.50 ஆயிரம் நிதிஉதவி

2 கன்றுகளை விற்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாற்றுத்திறனாளிக்கு கறவை மாடு வாங்க ரூ.50 ஆயிரம் நிதிஉதவியை அவரது வீட்டுக்கு நேரில் சென்று கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்.

Update: 2021-06-13 14:09 GMT
ஒரத்தநாடு,

தஞ்சையை அடுத்த ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது52). இவர் கண்பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி. தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தபோது கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டு பார்வை குறைபாடு ஏற்பட்டதால் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவருடைய மனைவி மகேஸ்வரி (42). இவர்களுக்கு பிரசாந்த் (20), சஞ்சய் (17) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் பிரசாந்த் கல்லூரியில் படித்து வருகிறார். சஞ்சய் பிளஸ்-2 முடித்துள்ளார். இந்தநிலையில் தனது 2-வது மகன் கல்வி செலவுக்காக 2 பசுங்கன்றுகளை ரவிச்சந்திரன் வளர்த்து வந்தார். கொரோனா நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த அளவுக்கு நிதி வழங்கி வருகின்றனர். சிறுவர், சிறுமிகளும் தாங்கள் சேமித்த உண்டியல் பணத்தை ஆர்வத்துடன் வழங்கி வருகின்றனர்.

கன்றுகளை விற்று கொரோனா நிதி

இதேபோன்று கொரோனா நிவாரண நிதி வழங்க ரவிச்சந்திரன் முடிவு செய்தார். இதற்காக மகனின் படிப்புக்காக வளர்த்து வந்த 2 பசுங்கன்றுகளையும் விற்று, அதன்மூலம் வந்த ரூ.6 ஆயிரத்தை முதல்- அமைச்சரின் நிவாரண நிதிக்காக தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவை சந்தித்து வழங்கினார்.

இந்த நிதியை பெற்று கொண்ட கலெக்டர், அப்போதே ரவிச்சந்திரனின் செயலை பாராட்டினார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுரையின்படி தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் நேற்றுகாலை ஆழிவாய்க்காலில் உள்ள ரவிச்சந்திரனின் வீட்டிற்கே நேரில் சென்று அவருக்கு கறவை மாடு வாங்கி தனது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

கவுரவப்படுத்திய கலெக்டர்

அப்போது ரவிச்சந்திரன் இந்த நிதியெல்லாம் வேண்டாம். நான் இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை என கூறினார். அதற்கு உங்களை போன்றவர்களை அரசு சார்பில் இப்படி தான் கவுரவப்படுத்த முடியும். எனவே இந்த நிதியை கொண்டு உங்கள் மகனின் படிப்பு செலவு, குடும்ப வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் என கூறி காசோலையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பார்வதி சிவசங்கர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

நிவாரண பொருட்கள்

தஞ்சையை அடுத்த மாத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்த 82 மாற்றுத்திறனாளிகள், கொரோனா பேரிடர் காரணமாக வேலையின்றி தவிப்பதாக தகவல் கிடைத்தது. அவர்களுக்கு உதவிடும் வகையில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள், 5 கிலோ அரிசி, உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தன்னார்வலர்கள் மூலமாக பெற்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 82 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேரில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, கல்வி புரவலர் முரசொலி, தாசில்தார்கள் வெங்கடேசன், பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்