கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி போட காத்திருந்த பெண் மயங்கி விழுந்து சாவு

கும்பகோணத்தில், கொரோனா தடுப்பூசி போட காத்திருந்த பெண் மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2021-06-13 14:13 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள காரனேசன் மருத்துவமனை, யானையடி பள்ளி, மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல், மேலக்காவேரி பள்ளிவாசல், சரஸ்வதி பாடசாலை பள்ளி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான முதல் தவணை கோவீஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக தகவல் பரவியது.

இதனைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் மையங்களில் நேற்று காலை முதல் திரளான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக திரண்டனர். இதனால் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மயங்கி விழுந்து சாவு

இதையடுத்து அந்த மையங்களில் போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கும்பகோணம் காரனேசன் மருத்துவமனையில் நேற்று காலை தடுப்பூசி போடுவதற்காக கும்பகோணம் லக்ஷ்மிநாராயணன் தெருவை சேர்ந்த முரளி என்பவரது மனைவி வள்ளிக்கண்ணு(வயது 40) தடுப்பூசி போடும் வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரம் வரிசையில் காத்து இருந்த வள்ளிக்கண்ணு திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை டாக்டர்கள் விரைந்து வந்து வள்ளிக்கண்ணுவை சோதனை செய்து பார்த்தனர். அப்போது வள்ளிக்கண்ணு இறந்து விட்டது தெரிய வந்தது.

அதிர்ச்சி

இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த வள்ளிக்கண்ணுவின் உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.

தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் காத்திருந்த பெண் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்