ஓமலூரில் போலீசார் அதிரடி சோதனை: கர்நாடகத்தில் இருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்த மதுபானம் பறிமுதல்- 194 மதுபாட்டில்கள்- ரூ.1½ லட்சமும் சிக்கியது

கர்நாடகத்தில் இருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்த 194 மதுபாட்டில்களையும், மதுவிற்ற ரூ.1½ லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-14 22:56 GMT
ஓமலூர்:
கர்நாடகத்தில் இருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்த 194 மதுபாட்டில்களையும், மதுவிற்ற ரூ.1½ லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பதுக்கி வைத்து விற்பனை
கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து ஓமலூரை அடுத்த சிக்கனம்பட்டி பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரத்துக்கு ரகசிய தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சிக்கனம்பட்டி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு சரக்கு வேன் நின்றது. வேன் டிரைவர் லீ பஜாரைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ரூ.1½ லட்சம் பறிமுதல்
விசாரணையில் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதாவது கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து, விஜய் என்பவரது வீட்டுக்கு பின்புறம் ஒரு பெட்டியில் வைத்து விற்பனை செய்வதாகவும் கூறினார். உடனே போலீசார் டிரைவர் கூறிய இடத்தில் சோதனை நடத்திய போது அங்கு இருந்த 194 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். வீட்டின் உரிமையாளர் விஜய் தப்பி ஓட்டம் பிடித்தார்.
பின்னர் டிரைவர் வெங்கடேசை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்தையும், சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர். அந்த வேன் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய் என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்