சூதாட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை - 4 பேர் கொண்ட கும்பல் கைது

ஈஞ்சம்பாக்கத்தில் பணம் வைத்து சூதாடியபோது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-06-16 05:53 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் என்ற ராம்கி (வயது 33). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். ஊரடங்கு தளர்வுகள் காரணமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், ராம்குமார் தனது நண்பர்களான வெட்டுவாங்கேணி பகுதியை சேர்ந்த சிவா (30) உள்பட சிலருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு ஒரு வீட்டில் மது அருந்தி விட்டு பணம் வைத்து சூதாடியுள்ளார்.

இதில் ஆட்டோ டிரைவர் ராம்குமார் வெற்றி பெற்று அதிக பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. அப்போது, ராம்குமாருக்கும், சிவாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவா அவரது நண்பர்களான பாலாஜி (27), சுரேஷ் (32) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை செல்போன் மூலம் தகவல் தெரிவித்து வரவழைத்தார். பின்னர் அந்த கும்பல் ராம்குமாரை தாக்கியதையடுத்து, சிவா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தினார்.

இதில் வயிறு, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் ராம்குமார் கீழே சரிந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஓடிவந்த நிலையில், கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, உயிருக்கு போராடி கொண்டிருந்த் ராம்குமாரை மீட்டு, சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதன்பின்னர் ராம்குமாரை கொலை செய்துவிட்டு அப்பகுதியில் பதுங்கி இருந்த சிவா (30), பாலாஜி (27), சுரேஷ் (32), ராஜி (27) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்