அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு

அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2021-06-16 18:53 GMT
கரூர்
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் ரூபாவதி. இவரது கணவர் முருகையன். இவர் நேற்று தனது 2 பெண் குழந்தைகளுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில், எனது மனைவி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார். தற்போது அவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தநிலையில் எங்களது சொந்த ஊரான குப்பிச்சிபாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத்தின் அனுமதி இல்லாமல் அதே ஊரை சேர்ந்த சிலர் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதற்கு காதப்பாறை ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றில் உள்ள மின் மோட்டாரில் இருந்து தன்னிச்சையாக பைப்லைன் போட்டு உள்ளனர்.
 பஞ்சாயத்து அனுமதி பெறாமல் பைப்லைன் அமைப்பது குறித்து கேட்டதற்கு எனது மனைவியின் பெயரில் அவதூறாக நோட்டீசை தயார் செய்து அதை வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்துள்ளனர். இது எங்களது குடும்பத்தினருக்கு மனஉளச்சலை உள்ளாக்கி உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்