பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-18 18:19 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன்  திடீரென்று வந்தார். பின்னா அங்கு அவர் ஆய்வு செய்தார். 

அங்குள்ள கொரோனா வார்டு, பிரசவ பகுதி, புதிய கட்டிட பணிகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். 

அப்போது அவர் ஆஸ்பத்திரிக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். 

ஆய்வின் போது மருத்துவத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ராஜா, ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் ஜோசப் மற்றும் பலர் உடன் இருந்தனர். ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதிப்பு குறைந்து உள்ளது

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் 250 படுக்கைகளில், தற்போது 171 படுக்கைகள் நிரம்பி உள்ளன. இதில் 80 பேருக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்த ஆஸ்பத்திரியில் கூடுதல் வசதிகள் மேம்படுத்தப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 

கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 2-வது வாரத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, தொற்று 38 சதவீதமாக இருந்தது.

 தற்போது அது 12 சதவீதமாக குறைந்து உள்ளது. குறிப்பாக நகர்பகுதிகளில் பாதிப்பு 10 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. ஊரக பகுதிகளில் 10 சதவீதமாக உள்ளது. 

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக வீடு, வீடாக சென்று தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

 2-வதாக முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கடைகள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 

680 மருந்துகள் ஒதுக்கீடு

கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இறப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு தனியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த குழுவினர் கருப்பு பூஞ்சை நோய் அல்லது பிற நோய்கள் பாதிக்கப் பட்டு இறந்தார்களா? என்று ஆய்வு செய்வார்கள்.

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க மருந்துக்கு தட்டுப்பாடு இருந்தது. இதையடுத்து அந்த துறை சார்ந்த இயக்குனரிடம் நேரடியாக பேசி 680 மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

தற்போது மருந்து தட்டுப்பாடு பிரச்சினை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்