பரோட்டா வீசும் சட்டக்கல்லூரி மாணவி

கேரளாவின் எருமேலி அடுத்த குருவமொழியைச் சேர்ந்தவர் அனஸ்வரா. இவரது குடும்பத்தினர் நடத்தி வரும் உணவகத்தில்தான், இவர் பரோட்டா மாஸ்டராக இருக்கிறார். இது குறித்த வீடியோ வேகமாகப் பரவியதும் சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் மீது பாசமழையைப் பொழிந்து கொண்டிருக்கின்றனர்.

Update: 2021-06-19 14:39 GMT
“என் அம்மா நடத்தும் உணவகத்தில் அவருக்கு உதவியாக சிறு வயதிலிருந்தே எனக்கு பரோட்டா போட்டு பழக்கம். என் வாழ்க்கையில் இது அன்றாடப் பணியாக மாறியது. நான் மட்டுமல்ல, 6-ம் வகுப்பு படிக்கும் என் தங்கை மாளவிகா மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் என் மற்றொரு தங்கை அனாமிகா ஆகியோரும் எங்கள் உணவகத்தில் பரோட்டா போடுவார்கள். எங்கள் பாட்டிதான் இந்த உணவகத்தைத் தொடங்கினார். அதன்பின் என் தாய் சுபியும், அவரது சகோதரியும் சேர்ந்து நடத்தி வருகின்றனர்.

தொடுப்புழா அல் அஜார் கல்லூரியில் எல்.எல்.பி. இறுதியாண்டு படித்து வருகிறேன். ஆரம்பத்தில் என் தோழிகள் என்னைப் பரோட்டா என்றுதான் அழைப்பார்கள். அதற்காக நான் வருத்தப்படவில்லை. மாறாக, பெருமைப்பட்டேன்.

எந்த வேலை என்றாலும், அது நேர்மையான வேலையாக இருந்தால் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. வழக்கறிஞர் ஆனாலும் பரோட்டா போடுவதை நான் தொடர்ந்து செய்வேன்.

என் வேலை அல்லது சூழலைப் பற்றிக் கவலைப்படாமல் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒருவருக்கொருவர் குறை சொல்லாமல் வாழ்ந்தால், நம் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும் என்பதுதான் நான் வாழ்க்கையில் கற்றறிந்த பாடம்” என்றார்.

மேலும் செய்திகள்