மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது; கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவு

பிற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது என்று கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-20 21:07 GMT
பெங்களூரு:பிற மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் மைசூரு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றவோ-இறக்கவோ கூடாது என்று கே.எஸ்.ஆர்.டி.சி. உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பஸ்களை இயக்க...

கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பஸ்களில் 50 சதவீத பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் பஸ்களில் 2 பேர் அமரும் இருக்கையில் ஒருவரும், 3 பேர் அமரும் இருக்கையில் 2 பேரும் அமருவதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா பாதிப்பு அடிப்படையில் கர்நாடகத்தில் உள்ள மாவட்டங்களை 3 வகையாக பிரித்து அரசு தளர்வுகளை வழங்கியுள்ளது. முதல் வகையில் உள்ள மாவட்டங்களான பெங்களூரு நகர், ராமநகர், துமகூரு, மண்டியா, கோலார், சிக்பள்ளாப்பூர் ஆகிய மாவட்டங்களில் நகர பஸ்களை இயக்கலாம். அந்த மாவட்டங்கள் இடையேயும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கலாம்.

மக்கள் நடமாட்டம்

2-வது வகையில் இடம் பெற்றுள்ள ஹாசன், உடுப்பி, தட்சிண கன்னடா, சிவமொக்கா, சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு, பெங்களூரு புறநகர், தாவணகெரே, குடகு, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களில் பாதி ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளதால், மக்களின் நடமாட்டத்திற்கு ஏற்றபடி பஸ்களை இயக்கும் நேரத்தை போக்குவரத்து கிளை அலுவலகங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

3-வது வகையில் மைசூரு மாவட்டம் மட்டும் உள்ளது. அதனால் அங்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், அந்த மாவட்டத்தில் பஸ்களை இயக்க அனுமதி இல்லை. மைசூரு வழியாக செல்லும் பஸ்கள், மைசூரு மாவட்டம் பயணிகளை இறக்கவோ, ஏற்றவோ அனுமதி இல்லை.
இவ்வாறு கே.எஸ்.ஆர்.டி.சி. தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்