பாடபுத்தகங்களை லாரியில் ஏற்றிய மாவட்ட கல்வி அதிகாரி

வேடசந்தூரில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் வராததால் பாடபுத்தகங்களை மாவட்ட கல்வி அதிகாரியே லாரியில் ஏற்றினார்.

Update: 2021-06-21 16:38 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை, ரெட்டியார்சத்திரம் ஆகிய 4 ஒன்றியங்களை உள்ளடக்கிய மாவட்ட கல்வி அலுவலகம் வேடசந்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது. 

இங்கிருந்து 4 ஒன்றியங்களை சேர்ந்த, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகங்கள் லாரி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. 

அந்த புத்தகங்களை லாரியில் ஏற்றுவதற்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று யாரும் வரவில்லை. குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பவேண்டிய நிலை ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி கீதா மற்றும் அலுவலக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து பாடபுத்தகங்களை லாரியில் ஏற்றி அனுப்பினர். வேடசந்தூரில், மாவட்ட கல்வி அதிகாரியே பாடபுத்தகங்களை லாரியில் ஏற்றி அனுப்பிய சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் அவரை பாராட்டினர்.

மேலும் செய்திகள்