அரசு பஸ்களை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்

பஸ் போக்குவரத்து விரைவில் தொடங்கும் நம்பிக்கையில் அரசு பஸ்களை ஊழியர்கள் சுத்தப்படுத்த தொடங்கி உள்ளனர்.

Update: 2021-06-21 19:26 GMT
காரைக்குடி,

பஸ் போக்குவரத்து விரைவில் தொடங்கும் நம்பிக்கையில் அரசு பஸ்களை ஊழியர்கள் சுத்தப்படுத்த தொடங்கி உள்ளனர்.

பஸ் போக்குவரத்து தொடக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முதல் 50 சதவீத பயணிகளோடு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதை தொடர்ந்து படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு பஸ் போக்குவரத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்குடி பணிமனையில் 50-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்களும், 100-க்கும் மேற்பட்ட வெளியூர் செல்லும் பஸ்களும் நிறுத்தப்பட்டு உள்ளன.

சுத்தப்படுத்தும் பணி

இந்நிலையில் நேற்று முதல் 4 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கியதையடுத்து காரைக்குடி பழைய பஸ் நிலைய பணிமனை மற்றும் மானகிரி பகுதியில் உள்ள தலைமை பணிமனையில் ஊரடங்கு காலக்கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. பஸ்களை டிரைவர்கள் இயக்கி பார்த்தனர். இருக்கைகள், பஸ்சில் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பஸ்சின் கண்ணாடியை தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர். இதற்கான பணியில் பணிமனை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இது குறித்து பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் கூறும் போது, கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் பஸ் போக்குவரத்தை தொடங்க அரசு அறிவிக்கும் என்ற நம்பிக்கையில் பஸ்களை சுத்தப்படுத்தி பராமரித்து வருகிறோம் என்றனர்.

பஸ்களை இயக்க கோரிக்கை

இது தொடர்பாக பொதுமக்கள் கூறும் போது, கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு உடனடியாக பஸ்களை இயக்க முன் வர வேண்டும். தற்போது பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருப்பதால் அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அரசு பஸ்களை இயக்கினால் மட்டுமே ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள். எனவே அரசு பஸ் போக்குவரத்தை மற்ற மாவட்டங்களிலும் விரைந்து தொடங்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்