சிறுவன், கர்ப்பிணி உள்பட 4 பேர் பலி

சிவகாசி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுவன், கர்ப்பிணி உள்பட 4 பேர் பலியாகினர்.

Update: 2021-06-21 20:03 GMT
தாயில்பட்டி,
சிவகாசி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுவன், கர்ப்பிணி உள்பட 4 பேர் பலியாகினர். 
வீட்டில் பட்டாசு தயாரிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியில் கலைஞர் காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது45). இவர் தனது வீட்டில் ஆட்களை வைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்தார். அவரது வீட்டையொட்டி அக்கம்பக்கத்தில் பல வீடுகள் உள்ளன.
நேற்று காலை 8 மணிக்கு அவர் வீட்டில் வழக்கம்போல் பேன்சி ரக வெடி தயாரிக்கும் பணி நடைபெற்றது. 
இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த சூர்யா (38), அப்பல்லோ மனைவி செல்வமணி (35), காளீஸ்வரன் மனைவி கற்பகவள்ளி ( 30) ஆகிய 3 பேர் ஈடுபட்டு இருந்தனர். அந்த நேரம் பார்த்து செல்வமணிைய பார்க்க அவருடைய மகன் ரெகோபெயம் சல்மான் (5) அங்கு சென்றிருந்தான்.
பயங்கர வெடிவிபத்து
அப்போது திடீரென ெவடிவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் மொத்தமாக வெடித்து சிதறின. மேலும் அந்த வீட்டில் தீப்பிடித்து மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது. உடனே அந்த வீடுகளில் உள்ளவர்கள் அனைவரும் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர். 
இதுகுறித்து வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
4 பேர் பலி 
மேலும் சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.. 
இருப்பினும் இந்த சம்பவத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட செல்வமணி, அவரை பார்க்க வந்த மகன்  ரெகோபெயம் சல்மான் மற்றும் கற்பகவள்ளி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சூர்யா என்பவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 
சம்பவம் நடந்த வீட்டுக்கு பக்கத்து வீடுகளை சேர்ந்த சோலையம்மாள், உள்பட 3 பேருக்்கும் காயம் ஏற்பட்டது. இதில் சோலையம்மாள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 2 பேரும் தாயில்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
8 வீடுகள் தரைமட்டம் 
மேலும் இந்த சம்பவத்தில் மகேஸ்வரன், ஏசையா, ஜெர்மன், தவசியம்மாள், நவோமி, மாரியப்பன், நாகேந்திரன், ஜோதிமாணிக்கம், ராஜரத்தினம், ஈசுவரன் உள்பட 15 பேரின் வீடுகள் சேதம் அடைந்தன.
இதில் 8 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டி.ஐ.ஜி.-சூப்பிரண்டு விசாரணை
சம்பவ இடத்தை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி பார்வையிட்டு விசாரணை நடத்தினார். வெடிவிபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். 
முன்னதாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோரும் சம்பவ இடத்ைத பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 
இதுகுறித்து தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ரவிராஜ் கொடுத்த புகாரின் பேரில் பிரபாகரன், சூர்யா, அப்பல்லோ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சூர்யா வெடிவிபத்தில் பலியானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
அதே போல் போலீசாரால் தேடப்படும் அப்பல்லோ, இந்த சம்பவத்தில் தனது மனைவி செல்வமணி, மகன் ரெகோபெயம் சல்மான் ஆகியோரை பறிகொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  
இந்த சம்பவத்தில் பலியான கற்பகவள்ளிக்கு கோபாலகிருஷ்ணன் (8), சக்திவேலன் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தற்போது கற்பகவள்ளி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
புறாக்கள் செத்தன
வெடிவிபத்து நடந்த வீட்டில் 5 புறாக்களை வளர்த்து வந்தனர். இந்த வெடிவிபத்தினால் கூண்டின் உள்ளேயே 5 புறாக்களும் கருகி இறந்து கிடந்தன. 
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்