பகலில் சுட்டெரித்த வெயில்! இரவை குளிரவைத்த மழை

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவில் மழை பெய்து குளிரவைத்தது. இதில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 38.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

Update: 2021-06-22 17:32 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கோடை காலம் முடிந்தும் வெயில் கொளுத்தி வருகிறது. சில நேரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகிறது. நேற்று முன்தினமும் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன்மூலம் கடலூரில் 103.2 டிகிரி வெயில் பதிவானது.

இதற்கிடையில் தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.


மழை

அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு திடீரென குளிர்ந்த காற்று வீசியது. சற்றுநேரத்தில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

 இதேபோல் பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, புவனகிரி, வேப்பூர், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

விருத்தாசலம் 

விருத்தாசலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில், கோடை வெயிலை பயன்படுத்தி விருத்தாசலம் பகுதியில் செங்கல் சூளை ஊழியர்கள் செங்கல் உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சில் வார்த்த கற்கள் அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென பெய்த மழையால் மண்ணாலான கற்கள் அனைத்தும் மழையில் நனைந்து சேதமடைந்தது.

 இதேபோல் விருத்தாசலம் - பெண்ணாடம் சாலையில் பல ஆண்டுகளாக நின்று கொண்டிருந்த ஒரு சில மரங்கள் சாய்ந்தன. இதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெட்டி அகற்றினர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 38.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 2 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 17. 86 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

மழை அளவு

மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
 விருத்தாசலம்- 37.3, குறிஞ்சிப்பாடி- 37, வடக்குத்து- 34, மே.மாத்தூர்- 31, மாவட்ட கலெக்டர் அலுவலகம்- 28.6, பண்ருட்டி- 27.2, கடலூர்- 23.6, புவனகிரி- 23, வானமாதேவி- 20, குடிதாங்கி- 17.5, கொத்தவாச்சேரி -16, வேப்பூர்- 15, தொழுதூர்- 13, அண்ணாமலை நகர்- 12.2, லக்கூர்- 11, காட்டுமயிலூர்- 10, சிதம்பரம்- 8, பெலாந்துறை- 5.8, சேத்தியாத்தோப்பு- 3.2, கீழச்செருவாய்- 3, லால்பேட்டை-2.2.

மேலும் செய்திகள்