மூங்கில்துறைப்பட்டு அருகே பட்டப்பகலில் துணிகரம் தொழிலாளி வீட்டில் ரூ3 லட்சம் நகை பணம் கொள்ளை

மூங்கில்துறைப்பட்டு அருகே பட்டப்பகலில் தொழிலாளி வீட்டில் புகுந்து ரூ3 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2021-06-22 18:15 GMT
மூங்கில்துறைப்பட்டு

தொழிலாளி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் அய்யனார்(வயது 37). இவர் ஈரோட்டில் தங்கி இருந்து கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார். இதனால் வீட்டில் அவரது மனைவி மகாலட்சுமி(34), மகள் அனுசுயா(17), காயத்ரி(9) ஆகியோர் மட்டும் இருந்தனர். 
இந்த நிலையில் நேற்று காலை மகாலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு அவரது மகள்களை அழைத்துக்கொண்டு சங்கராபுரம் அருகே உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம்செய்து முடித்த பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தனர்.

நகை-பணம் கொள்ளை

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.76 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. 
மகாலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு இரு மகள்களுடன் கோவிலுக்கு சென்றதை அறிந்து கொண்டு யாரோ மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். கொள்ளை போன நகை பணத்தின் மதிப்பு ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

 இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பட்டப்பகலில் தொழிலாளி வீட்டில் புகுந்து மர்மநபர்கள் நகை-பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற சம்பவம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்