கொரோனா நிவாரணம் பெற ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள்

ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரணம் பெற ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2021-06-22 19:44 GMT
கரூர்
நொய்யல்
 ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக பலர் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டது. அதன்படி, முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
தற்போது 2-வது தவணையோடு 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
டோக்கன்
தற்போது கொரோனா கால கட்டமாக இருப்பதால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்கும் பொருட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தேதி வாரியாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 
அதன்படி, கரூர் மாவட்டத்தில் நேற்றைய தேதிக்கு (22-ந் தேதி) டோக்கன் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பெற்றுச் சென்றனர். 
அதேபோல புகளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தவுட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
சமூக இடைவெளியின்றி...
ஆனால், அந்த ரேஷன் கடையில், சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் குவிந்து நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க முண்டியடித்தனர். அவர்களில் பலர் முககவசம் அணியாமலும் இருந்தனர். சமூக இடைவெளி விட்டு வரிசையில் வாருங்கள் என்று கடை ஊழியர்கள் தெரிவித்தும் பயன் இல்லை.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ரேஷன் கடைகளில் அதிகளவு கூட்டம் கூடினால் வைரஸ் தொற்று பரவும் என்பதால்தான் தேதி வாரியாக டோக்கன் வழங்கப்பட்டு அதன்படி நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் யாரும் முறையாக கடைபிடிப்பதில்லை. பொருட்கள் வாங்க முண்டியடிக்கும்போது கொரோனா தொற்று பரவும். ஆகவே, இனிவரும் நாட்களிலாவது டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்திற்கு சென்று முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பொருட்களை பெற்றுச் செல்லுமாறு கூறினார்.

மேலும் செய்திகள்