செங்கோட்டையில் இளம்பெண் மீண்டும் போராட்டம்

தந்தையை தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி செங்கோட்டையில் இளம்பெண் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2021-06-22 20:58 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி (வயது 50). மாற்றுத்திறனாளியான இவர் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக புளியரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் அவரை தாக்கியதாக புகார் கூறப்பட்டது.

இதன்பின்னர் அவர் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது இரண்டாவது மகள் அபிதா (22) நேற்று முன்தினம் மாலை செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தினார். தனது தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். 

இந்த நிலையில் பிரான்சிஸ் அந்தோணி நேற்று மாலை 5 மணி அளவில் தனது குடும்பத்தினருடன் பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் சிகிச்சை பெறும் கட்டிடத்தின் மேல் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி மீது அபிதா ஏறினார். அவர் திடீரென்று அந்த தொட்டியில் அமர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், புளியரை போலீசார், தீயணைப்பு துறையினர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அப்போது, அபிதாவுடன் ஒலிபெருக்கி மூலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தனது தந்தையை தாக்கிய போலீசார் மீது துறைரீதியாக வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும். வழக்குப்பதிவு செய்ததை காண்பித்தால் மட்டுமே கீழே இறங்கி வருவேன் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது குடும்பத்தினர் கூறியும், அபிதா கீழே இறங்கி வரவில்லை. தொடர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு மஜீத் ரகுமான் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அவர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்