கோவிலில் ஆலயமணி- பொருட்கள் திருட்டு

செந்துறை அருகே கோவிலில் ஆலயமணி-பொருட்கள் திருட்டு போயின. மற்றொரு சம்பவத்தில் வெல்டிங் பட்டறையில் எந்திரங்களை மர்ம நபர்கள் தூக்கிச்சென்றனர்.

Update: 2021-06-24 19:26 GMT
செந்துறை:

கோவிலில் திருட்டு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் பாட்டையப்பா கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக பரமசிவம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் கோவிலை திறப்பதற்காக வந்தார்.
அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பரமசிவம், உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது கருவறையில் வைக்கப்பட்டிருந்த 2 குத்துவிளக்குகள், ஆலயமணி, தீபம் ஏற்றும் வெள்ளித்தட்டு உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 20-க்கும் மேற்பட்ட பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர், செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெல்டிங் பட்டறையில்...
இதேபோல் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு என்ற தனவேல். இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அவர் பட்டறையை திறப்பதற்காக வந்தபோது பட்டறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பட்டறைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த வெல்டிங் எந்திரம், வெல்டிங் ராடு உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.14 ஆயிரம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து செந்துறை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்