கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்கினால் கண்டறிவது எப்படி?-டீன் ரேவதி தகவல்

கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்கினால் கண்டறிவது எப்படி? என்பது குறித்து டீன் ரேவதி தகவல் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-06-24 20:08 GMT
சிவகங்கை,

கொரோனா 3-வது அலை குழந்தைகளை தாக்கினால் கண்டறிவது எப்படி? என்பது குறித்து டீன் ரேவதி தகவல் தெரிவித்து உள்ளார்.

7,911 பேர் குணமடைந்தனர்

இது தொடர்பாக சிவகங்கை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ரேவதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா 2-வது அலை தாக்குதலில் தொற்றால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரத்து 107 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 7 ஆயிரத்து 911 பேர் ்பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 124 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.இவர்களில் 90 பேர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 34 பேர் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள். தற்போது 72 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கருப்பு பூஞ்சைக்கு 16 பேர் அனுமதி

இந்த மருத்துவமனையில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் 16 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 2 பேர் அறுவை சிகிச்சை செய்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதே போல் கர்ப்பிணி பெண்களில் கொரோனா தொற்று உள்ளவர்களுக்காக மகப்பேறு பிரிவில் 45 படுக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. தொற்று பாதிப்பில் இருந்த 762 கர்ப்பிணிகள் பூரண குணமடைந்துள்ளனர்.
கொரோனா 3-வது அலை
ெகாரோனா முதல் அலையில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்கள் பலியானார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும் பாதிப்புக்குள்ளாகி இறந்தனர். கொரோனா 2-வது அலை சற்று வீரியமிக்கது. இதில் நடுத்தர, வாலிப வயதை அடைந்தவர்களும் பாதிக்கப்பட்டு இறந்தனர். பெரும்பாலானோர் மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு ஆளாக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது கொரோனா 3-வது அலை தாக்குதல் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த அலையில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் 3-வது அலையை எதிர்கொள்ள சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தயார் நிலையில் வைத்துள்ளோம். இதற்காக 65 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 55 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடியது.

குழந்தைகளை தாக்கினால் கண்டறிவது எப்படி?

மேலும் உடனடியாக ஆக்சிஜன் அளவை கண்காணிக்க 10 பல்ஸ் ஆக்சி மீட்டர்களும் உள்ளது. கொரோனா 3-வது அலையில் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், கண்கள் சிவப்பு நிறமாகுவது, நெறிகட்டுதல், கைகால் வீக்கம், வயிற்று போக்கு, உடம்பில் தடிப்புக்கள் தோன்றுவது போன்றவை நோய்தொற்றின் அறிகுறியாக இருக்கும். இது போன்ற அறிகுறிகள் ஏற்படுமாயின் உடனே குழந்தைகளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து அவர்கள் உயிரை காப்பாற்ற பெற்றோர் அனைவரும் முன் வர வேண்டும். எனவே கொரோனா தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வெளியே செல்லும் பெற்றோர் கட்டாயம் முககவசம், சமூக இடைெவளியை பின்பற்ற வேண்டும். பெற்றோர் பாதுகாப்பு தான் குழந்தைகளுக்கு நலனை தரும். எனவே 3-வது அலையில் இருந்து குழந்தைகளை தற்காத்து கொள்ள பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலமுருகன், மகப்பேறு மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் காயத்ரி, குழந்தைகள் பிரிவு தலைவர் டாக்டர் குணா, பொது மருத்துவ பிரிவின் தலைவர் டாக்டர் பீர்முகமது, மயக்கவியல் துறை தலைவர் வைரவ சுந்தரம், காது மூக்கு தொண்டை பிரிவின் தலைவர் டாக்டர் சரவணன், நிலைய மருத்துவ அலுவலர்கள் டாக்டர் முகமதுரபி, உதவி மருத்துவ அலுவலர்கள் மிதுன்குமார், வித்யாஸ்ரீ, டாக்டர் செந்தில், டாக்டர் சூரிய நாராயணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்