ஒகேனக்கல் மெயின் அருவியில் தடையை மீறி குளித்த சுற்றுலா பயணிகள்

ஒகேனக்கல் மெயின் அருவியில் நேற்று தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளித்தனர்.

Update: 2021-06-26 19:37 GMT
பென்னாகரம்:

 சுற்றுலா தலம்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். 
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் அருவிகள், பஸ் நிலையம், நடைபாதை, முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
தடையை மீறி குளித்த சுற்றுலா பயணிகள்
இந்த நிலையில் கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. 
இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தடையை மீறி மெயின் அருவி மற்றும் சினிபால்சில் குளித்தனர். மாவட்ட நிர்வாகம் ஆலாம்பாடி, மடம் சோதனைச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்தி சுற்றுலா பயணிகளை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்