விபத்தில் படுகாயம் அடைந்த தம்பதி, குழந்தையை காப்பாற்றிய பசவராஜ் ஹொரட்டி

சித்ரதுர்காவில், விபத்தில் படுகாயம் அடைந்த தம்பதி மற்றும் குழந்தையை பசவராஜ் ஹொரட்டி காப்பாற்றினார்.

Update: 2021-06-26 20:20 GMT
விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு பசவராஜ் ஹொரட்டி முதலுதவி அளித்தார்.
பெங்களூரு:

கர்நாடக மேல்-சபை தலைவராக இருந்து வருபவர் பசவராஜ் ஹொரட்டி. இவர், நேற்று காலையில் பெங்களுருவில் இருந்து தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு காரில் புறப்பட்டு சென்றார். சித்ரதுர்கா மாவட்டம் புறநகர் சிரிகெரே தேசிய நெடுஞ்சாலையில் வரும் போது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்தில் சிக்கி இருந்தது. இந்த விபத்தில் தம்பதியும், குழந்தையும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினாா்கள். இதை பார்த்து பசவராஜ் ஹொரட்டி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக 3 பேருக்கும் அவர் முதலுதவி சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுத்தாா். அத்துடன் போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு பசவராஜ் ஹொரட்டியே தனது செல்போனில் பேசி தகவல் தெரிவித்தார்.

  உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் தம்பதி, குழந்தையை ஆம்புலன்சில் ஏற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அனுப்பி வைத்தார். அவர்கள் 3 பேருக்கும் உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் போலீசாரிடம் தெரிவித்தார். விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை காப்பாற்ற உதவிய பசவராஜ் ஹொரட்டியை கிராம மக்கள் பாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்