சென்னையில் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை: நீர்நிலைகளில் ‘டிரோன்’ மூலம் மருந்து தெளிக்கும் பணி

சென்னையில் கொசு உற்பத்தியை தடுக்க நீர்நிலைகளில் ‘டிரோன்’ மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இதனை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டார்.

Update: 2021-06-27 05:53 GMT
சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி கொசு ஒழிப்பு பணிக்கென சென்னை மாநகராட்சி 2,129 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு 1,260 நிரந்தர மலேரியா பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப்பணியாளர்கள் என மொத்தம் 3,619 பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் எந்திரங்கள் மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் எந்திரங்கள் மூலமும் கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் நீர்நிலை பகுதிகளில் எந்திரங்கள் கொண்டு ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தங்குதடையின்றி செல்வது மட்டுமின்றி கொசுக்களின் உற்பத்தியும் தடுக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்த ஆலோசனையின்படி நீர்வழித்தடங்களில் ‘டிரோன்’ மூலம் சோதனை முறையில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்று சென்னை மாநகராட்சி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து, ராயபுரம் மண்டலம், லாங்ஸ் கார்டன் சாலையில் சோதனை முறையில் நீர்வழித்தடங்களில் உள்ள கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்கள் ஆகியவற்றை அழிக்கும் வகையில் ‘டிரோன்’ மூலம் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இதனை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று பார்வையிட்டார்.

மேலும், பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பொருட்கள், உடைந்த சிமெண்டு தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ளதால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் டாக்டர் நர்னாவாரே மனிஷ் சங்கர்ராவ், டி.சினேகா, தலைமை என்ஜினீயர் எஸ்.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்