தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் 47 நாட்களுக்கு பிறகு கடற்கரைகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் 47 நாட்களுக்கு பிறகு கடற்கரைகள் திறப்பு பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நடைபயிற்சி சென்றனர்.

Update: 2021-06-29 12:04 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் 47 நாட்களுக்கு பிறகு கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் (மே) 10-ந்தேதி முதல் கடற்கரைகள் முழுவதும் மூடப்பட்டன.

இந்தநிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்டிருக்கும் ஊரடங்கு 7-வது முறையாக ஜூலை 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்போது அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வில், கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் கடற்கரைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றது.

அதன்படி, தமிழகம் முழுவதும் கடற்கரைகள் 47 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை முதல் மீண்டும் திறக்கப்பட்டன. அதிகாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சிக்கு மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன.

சென்னையில் உலக புகழ்பெற்ற மெரினா கடற்கரை 47 நாட்களுக்கு பிறகு மீண்டும் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து அதிகாலை முதலே நடைபயிற்சி மேற்கொள்வோர் ஆர்வமுடன் கடற்கரைக்கு வர தொடங்கினர்.

சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்ய தொடங்கிய மழை காலை 9 மணி வரை நீடித்தது. இதனால் நடைபயிற்சிக்கு நேற்று குறைவான அளவிலேயே மக்கள் வந்திருந்தனர். குடைகள் பிடித்தபடியும், முக கவசம் அணிந்தநிலையிலும் மக்கள் கடற்கரையில் நடமாடியதை பார்க்க முடிந்தது. இதனால் மெரினா சர்வீஸ் சாலை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பழையபடி மனித நடமாட்டத்தை காண தொடங்கியது.

இதேபோல பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட்நகர், நீலாங்கரை, எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இதர கடற்கரைகளிலும் நேற்று மக்கள் ஆர்வத்துடன் நடைபயிற்சி மேற்கொண்டதை பார்க்க முடிந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபயிற்சிக்காக கடற்கரைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மெரினா கடற்கரைக்கு வந்த சிலர் கூறுகையில், ‘‘கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு, புறாக்களின் நடமாட்டம், இதமான ஒரு சூழலில் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளது புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது’’, என்றனர்.

மேலும் செய்திகள்