வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதான 3-வது முக்கிய குற்றவாளி சென்னை அழைத்து வரப்பட்டார்

வங்கி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட 3-வது முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை அழைத்து வரப்பட்டார்.

Update: 2021-06-30 14:59 GMT
ஆலந்தூர்,

சென்னை தரமணி, வேளச்சேரி உள்பட பல பகுதிகளில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையங்களை குறிவைத்து கடந்த 15-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை அடுத்தடுத்து நூதன முறையில் ரூ.45 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விசாரணை செய்ததில் வடமாநில கொள்ளையர்கள் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து தி.நகர் மற்றும் கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர்கள் தலைமையிலான தனிப்படை அரியானாவிற்கு விரைந்தது. அங்கு அரியானா போலீசாருடன் இணைந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அமீர் அர்ஷ் மற்றும் வீரேந்தர் ராவத் ஆகிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் போலீசாரின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

3-வது குற்றவாளி கைது

இந்த நிலையில் அரியானாவில் பதுங்கியிருந்த 3-வது முக்கிய குற்றவாளியான நஜீம் உசேன் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். கைது செய்யப்பட்ட நஜீம் உசேன் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டான்.

இதையடுத்து, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட கொள்ளையன் நஜீம் உசேனை போலீஸ் வாகனத்தில் நேற்று பீர்க்கன்கரணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு வைத்து கொள்ளைச் சம்பவம் நடந்தது எப்படி? என நடித்து காட்ட செய்தனர். மேலும் அவர்களுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கூட்டாளிகள் யார்? என விரிவாக விசாரணை நடத்த உள்ளனர். அதன் பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்