ரேஷன் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு முறை அமலுக்கு வந்தது

சென்னை மாநகரில் உள்ள ரேஷன் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு முறை அமலுக்கு வந்தது. ஒரு சில கடைகளில் பழுதான எந்திரங்களை மாற்றி சேவையை விரைவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-07-02 17:22 GMT
சென்னை,

கொரோனா நிவாரண உதவித்தொகையும், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முதல் புதிய ரேஷன் கார்டு ஒப்புதல் அளிக்கும் சேவை மற்றும் புதிய ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணியை தொடங்கவும் மற்றும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு முறையை மீண்டும் தொடங்கவும் அரசு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி சென்னை மாநகரப்பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜூலை மாத உணவு பொருட்களை வாங்க பொதுமக்கள் சென்றனர். இவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். முககவசமும் கண்டிப்பாக அணிந்து வர அறிவுறுத்தப்பட்டனர்.

உணவு பொருட்கள்

ஸ்மார்ட் கார்டில் பெயர் இடம் பெற்றுள்ள ஒரு உறுப்பினர் வந்து ரேஷன் கடைகளில் உள்ள எந்திரத்தில் கைவிரல் ரேகையை பதிவு செய்தனர். பதிவு சரியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜூலை மாதத்திற்கான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை பொதுமக்கள் உற்சாகமாக வாங்கிச்சென்றனர்.

இதுகுறித்து வில்லிவாக்கம், புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதியில் உணவு பொருட்களை வாங்க வந்தவர்கள் சிலர் கூறியதாவது:-

ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு விரல் ரேகை பதிவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சற்று காலதாமதம் ஆனாலும் பொருட்களை முறையாக பெற முடிகிறது. இதில் எந்தவித முறைகேடுகளுக்கும் வாய்ப்பு இல்லை என்பதால் இதனை முழுமையாக வரவேற்கிறோம். கார்டுதாரர்கள் தவிர வேறு எவரும் வந்து பொருட்களை வாங்க முடியாது. ஒரு சில கடைகளில் விரல் ரேகை எந்திரம் சரியாக வேலை செய்யாமல் அடிக்கடி பழுதாகி விடுகிறது. அவற்றை மாற்றி விட்டு புதிய எந்திரங்களை வழங்கி சேவையை விரைவுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்