இடி-மின்னலுடன் பலத்த மழை, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர்-வாணியம்பாடி பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழைபெய்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Update: 2021-07-02 17:33 GMT
திருப்பத்தூர்

தண்ணீர் புகுந்தது

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 5-ந் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக மழைபெய்து வருகிறது. நேற்று முன்தினம் திருப்பத்தூரில் மாலை 5 மணி அளவில் லேசான மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் இரவு முதல் இடி-மின்னலுடன் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது.

இந்த மழையால் திருப்பத்தூர் அண்ணாநகர், கலைஞர் நகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய தூக்கமில்லாமல் சிரமப்பட்டனர். பல்வேறு தெருக்களில் உள்ள பள்ளங்கள் மற்றும் கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் ஒடிந்து விழுந்தன.

வாணியம்பாடி

வாணியம்பாடி, உதயேந்திரம், அம்பலூர், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, நாரயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணியளவில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நகர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

நேற்றுமுன்தினம் பெய்த மழையால் நாராயணபுரம், அலசந்தாபுரம் பகுதியில் காட்டாறு, மண்ணாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நேற்று மாலையில் பெய்த மழையால் காட்டாறு, மண்ணாற்றில் ஓடிய வெள்ளம் ஆவாரங்குப்பம் பகுதியில் பாலாற்றில் கலந்து பாலாற்றிலும் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலத்த காற்று வீசியதால் சில இடங்களில் விழுந்த மரங்களை தீயணைப்பு வீரர்கள் சென்று அப்புறப்படுத்தினர். 

மேலும் செய்திகள்