உப்பள்ளி டவுனில் வீடு புகுந்து ரூ.15 லட்சம் நகை-பணம் திருட்டு

உப்பள்ளி டவுனில் வீடு புகுந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதற்காக அவர்கள் பக்கத்து வீடுகளின் கதவை வெளிப்புறமாக பூட்டியதும் தெரியவந்தது.

Update: 2021-07-02 20:53 GMT
பெங்களூரு:
  
திருமண வீட்டுக்கு சென்றனர்

  தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் படவேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் கீதா நாயக்கர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள கீதா நாயக்கர் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.

  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்மநபர்கள், நேற்று முன்தினம் இரவு கீதா நாயக்கரின் வீட்டில் திருட திட்டமிட்டனர். இதற்கு வசதியாக அக்கம்பக்கத்து வீடுகளின் கதவுகளை மர்மநபர்கள் வெளிப்புறமாக பூட்டியுள்ளனர்.

ரூ.15 லட்சம் நகை-பணம் திருட்டு

  பின்னர் கீதா நாய்க்கரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் தங்கம், வெள்ளி பொருட்கள், ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு வீடு திரும்பிய கீதா நாயக்கர் வீட்டு கதவு உடைக்கப்பட்டு, திருட்டு நடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

  உடனே இதுகுறித்து உப்பள்ளி உபநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருமணத்தில் பங்கேற்க கீதா நாயக்கர் சென்ற சமயத்தில் மர்மநபர்கள் வீடு புகுந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான 300 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி, ரூ.1.50 லட்சம் ரொககம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

  மேலும் திருட்டு நடக்கும் போது யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அக்கம்பக்கத்து வீடுகளின் கதவுகளை வெளிப்புறமாக மர்மநபர்கள் பூட்டிவிட்டு கைவரிசையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

  இதுதொடர்பாக உப்பள்ளி உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்