தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது

பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-02 21:18 GMT
பழனி: 

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இதுகுறித்து பழனி போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. 

இதையடுத்து மோட்டார் சைக்கிள் திருடும் மர்ம நபர்களை பிடிக்க பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா உத்தரவிட்டார். அதன்பேரில் பழனி பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று பழனி புதுநகர் பகுதியில் ஆவணங்கள் ஏதுமின்றி மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யப்படுவதாக பழனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அந்த பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். 

மேலும் அவர்களிடம் மோட்டார் சைக்கிள்களுக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பழனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் மகன் சக்திவேல் (வயது 20), பழனி மதினாநகரை சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் ஹபீப் ரகுமான் (23) மற்றும் 18 வயது உடைய ஒரு சிறுவன் என்பதும், பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை, திருச்சி, திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

 இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இதில் ஹபீப் ரகுமான் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளன.

பின்னர் அவர்களிடம் இருந்து 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 


இவற்றின் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் ஆகும். மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்