100 நாள் வேலைத் திட்டப்பணியாளர்கள் 100 சதவீதம் பணியாற்ற அனுமதி

மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டப்பணியாளர்கள் 100 சதவீதம் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-02 21:21 GMT
போடிப்பட்டி
மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டப்பணியாளர்கள் 100 சதவீதம் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நூறுநாள் வேலை திட்டம்
மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள 11 ஊராட்சிகளில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத் திட்டம் உள்ளது. 
இதன் மூலம் பயனாளியின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் பயனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் வேலை வழங்கப்படவில்லை.
கிருமி நாசினி
படிப்படியாக தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியதால் மீண்டும் பணிகள் தொடங்கியது. ஆனாலும் ஆரம்ப கட்டத்தில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டது. 
தற்போது 100 சதவீதம் பணியாளர்களும் வேலைக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனாலும் கொரோனா தொற்று குறித்த அச்சம் காரணமாக ஒருசில பயனாளிகள் பணிக்கு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
ஆனால் கிருமி நாசினியால் கைகளைக் கழுவி, உரிய சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி பணிகளை மேற்கொள்ள பயனாளிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 
தற்போது வேடப்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்