துப்பாக்கிச்சூடு நடத்தியது நக்சலைட்டுகளா சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை தமிழக-கேரள எல்லையில் பதற்றம் நீடிப்பு

கம்பம் அருகே வனத்துறையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் நக்சலைட்டுகளா? என்ற சந்தேகத்தின்பேரில் சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழக-கேரள எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

Update: 2021-07-03 11:50 GMT

தேனி:
தேனி மாவட்டம், கம்பம் மேற்கு வனப்பகுதியில் செல்லார்கோவில் மெட்டு என்ற இடத்தில் கடந்த 30-ந்தேதி இரவு வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருந்தது. வனத்துறையினரை பார்த்ததும் அந்த கும்பலில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து அந்த கும்பலை வனத்துறையினர் துரத்திச் சென்றனர். அப்போது வன காவலர் காஜாமைதீனை அந்த கும்பல் தாக்கியது. இதில் அவருக்கு நெற்றியில் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்து கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கியின் ஒரு பாகம், மான் கொம்பு ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வன விலங்குகளை வேட்டையாட வந்தவர்களா? அல்லது நக்சலைட்டுகளா? என தெரியவில்லை. இதுதொடர்பாக கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிரடிப்படையினர்
இதனிடையே வனத்துறையினரை தாக்கிய நபர்கள் நக்சலைட்டுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் சத்தியமங்கலம், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் 15 பேர், திண்டுக்கல் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் 8 பேர் ஆகியோர் கம்பத்துக்கு வந்துள்ளனர். அவர்களுடன் தேனி மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் 15 பேரும் இணைந்து வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் 3-வது நாளாக நேற்றும் தேடுதல் வேட்டை நடந்தது. கம்பம், கூடலூர், தேவாரம் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் இந்த குழுவினர் பல குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகியும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பதற்றம் நீடிப்பு
கடந்த 2007-ம் ஆண்டு பெரியகுளம் அருகே முருகமலை வனப்பகுதியில் நச்சலைட்டுகள் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட முயன்றனர். அவர்களில் 3 பேர் அதிரடிப்படை போலீசாரிடம் சிக்கினர். 8 பேர் தப்பி ஓடினர். 2018-ம் ஆண்டு கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த நக்சலைட்டுகளை பிடிக்க முயன்ற போது போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், நக்சலைட் நவீன்பிரசாத் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவங்களை தொடர்ந்து தேனி மாவட்ட வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளதால் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.


மேலும் செய்திகள்