மதுரையில் குழந்தைகளை விற்பனை செய்த காப்பக நிர்வாகி உள்பட 2 பேர் போடியில் கைது கேரளாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற போது சிக்கினர்

மதுரையில் குழந்தைகளை விற்பனை செய்த காப்பக நிர்வாகி உள்பட 2 பேர் கேரளாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற போது போடியில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-03 15:17 GMT

தேனி:
மதுரை ரிசர்வ்லைன் போலீசார் குடியிருப்பில் இதயம் அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு 38 ஆண்கள், 35 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் என 84 பேர் தங்கியிருந்தனர்.
இந்த காப்பகத்தில் ஆதரவற்ற நிலையில் தங்கி இருந்த ஐஸ்வர்யா (வயது 22) என்பவரின் ஒரு வயது குழந்தை மாணிக்கம் மற்றும் ஸ்ரீதேவி என்ற பெண்ணின் 2 வயது குழந்தை தனம் என 2 குழந்தைகள் திடீரென மாயமாகின. இதுகுறித்து மதுரை போலீசார் நடத்திய விசாரணையில் காப்பக நிர்வாகிகளால் போலியான ஆவணங்கள் தயாரித்து அந்த குழந்தைகள் பணத்துக்காக விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
7 பேர் கைது
விற்பனை செய்யப்பட்ட 2 குழந்தைகளையும் சில நாட்களுக்கு முன்பு போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் கண்டுபிடித்து மீட்டனர். பின்னர் காப்பகம் மூடப்பட்டு, அதில் வசித்தவர்கள் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர்.
போலி ஆவணங்கள் தயாரித்து சட்டத்திற்கு விரோதமாக குழந்தைகளை விற்றதாக காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணி (32), குழந்தைகளை வாங்கிய கண்ணன் (50), பவானி (45), சகுபர்சாதிக் (38), அனிஸ்ராணி (35), இதற்கு உடந்தையாகவும், புரோக்கர்களாகவும் செயல்பட்ட ராஜா (38), செல்வி (42) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய நபர்களாக இருந்த காப்பக நிறுவனர் சிவக்குமார் (39), அவருடைய உதவியாளர் மதர்ஷா (27) ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.
2 பேர் சிக்கினர்
இந்நிலையில் அவர்கள் இருவரும் தேனி வழியாக கேரளாவுக்கு காரில் தப்பிச் செல்ல முயன்றனர். இதுகுறித்து மதுரை போலீசார் தேனி மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தமிழக-கேரள மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று ராசிங்காபுரம்-போடி சாலை வழியாக காரில் கேரளாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற அவர்கள் இருவரையும் போடி தாலுகா போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் இதுகுறித்து மதுரை தனிப்படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மதுரையில் இருந்து போடிக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் சிவக்குமார், மதர்ஷா ஆகிய இருவரையும் போலீசார் ஒப்படைத்தனர்.
பின்னர் அவர்கள் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இதுகுறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்