கடலூர் வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது

கடலூர் வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கண்டமங்கலம் பகுதியில் போலீசாரிடம் சிக்கினர்.

Update: 2021-07-03 16:25 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தும் வகையில் செயல்படும் குற்றவாளிகள் மற்றும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலைய பகுதிகளில் புதுச்சேரி மாநில ரவுடிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 30-ந் தேதி புதுச்சேரி மாநில எல்லையை ஒட்டிய கடலூர் மாவட்ட எல்லையில் இருதரப்பு ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே நடந்த மோதலில் ரவுடிகள் வெடிகுண்டுகள் வீசியும் கத்தியால் இருபிரிவினரும் தாக்கிக்கொண்டதன் அடிப்படையில் அச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க புதுச்சேரி மாநில எல்லையை ஒட்டிய விழுப்புரம் மாவட்டத்தின் கோட்டக்குப்பம், ஆரோவில், கண்டமங்கலம், வளவனூர் பகுதிகளில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர ரோந்துப்பணி நடைபெற்றது.

2 பேர் சிக்கினர்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கண்டமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட புதுச்சேரி மாநில எல்லையை ஒட்டிய பகுதிகளில் தனிப்படை போலீசார், தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர்கள் இருவரும் புதுச்சேரி குளத்து மேட்டுத்தெருவை சேர்ந்த சேகர் மகன் விநாயகமூர்த்தி (வயது 30) மற்றும் அவரது கூட்டாளியான பாக்கத்தை அடுத்த வெள்ளாங்குப்பம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அறிவழகன் என்கிற அய்யனார் (29) என்பதும், இவர்கள் இருவரும் கடலூர் வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள், இவர்கள் பல்வேறு கொள்ளை வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து விநாயகமூர்த்தி, அறிவழகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்