சாலையின் குறுக்கே போடப்பட்ட முட்செடிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தியாகதுருகம் அருகே சாலையின் குறுக்கே போடப்பட்ட முட்செடிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-07-03 17:02 GMT
கண்டாச்சிமங்கலம்

புதுக்காலனி சாலை 

தியாகதுருகம் அருகே கூத்தக்குடி புதுக்காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதே பகுதியைச் சேர்ந்த ராமதாஸ்(வயது 48), இவரது மனைவி தனலட்சுமி, மகன்கள் ராஜ்குமார், விஜயகுமார் ஆகியோர் புதுக்காலனிக்கு செல்லும் சாலையின் குறுக்கே முட்செடிகளை வெட்டி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
இதை அந்த பகுதி மக்கள் ராமதாசிடம் கேட்டபோது எனது உறவினருக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைத்துள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதால் இந்த சாலை எனக்கு சொந்தம் என கூறியதோடு முட்செடிகளையும் அகற்ற மறுத்ததாக தெரிகிறது. 

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கள்ளக்குறிச்சி-வேப்பூர் சாலையில் கூத்தக்குடி புதுக்காலனி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாஸ் உள்ளிட்ட போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலையின் குறுக்கே போடப்பட்ட முட்செடிகளும் அகற்றப்பட்டன. இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.  சாலையின் குறுக்கே போடப்பட்ட முட்செடிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்த சம்பவம் கூத்தக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்