காணாமல் போன ஏரியை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார்

காணாமல் போன ஏரியை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸ் நிலையத்தில் புகார்

Update: 2021-07-03 17:15 GMT
கீரமங்கலம், ஜூலை.4-
கீரமங்கலம், நகரம், சேந்தன்குடி ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பெரியாத்தாள் ஏரி அமைந்துள்ளது. கொத்தமங்கலத்தில் அம்புலி ஆற்றில் காமராஜர் கட்டிய அணையிலிருந்து தண்ணீர் வருவதோடு, மேலும் பல பகுதிகளில் இருந்தும் தண்ணீர் வர வரத்து வாரிகள் இருந்துள்ளது. ஆனால் தற்போது நீர்வழித்தடங்கள் காணாமல் போனதோடு, நீர்நிலையும் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் வடக்கு பக்கம் பாசனத்திற்காக 1808-ல் குமிழி மடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் குறையாமல் இருக்கும். இத்தகையை முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியை காணவில்லை. அதனை கண்டுபிடித்து தாருங்கள் என்று பலமுறை புகார்தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் நேற்று `நீரின்றி அமையாது உலகு' என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பெரியாத்தாள் ஊரணி ஏரியை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று புகார் கொடுத்துள்ளனர். மேலும் இளைஞர்கள் கூறும் போது, இந்த புகார் மனுவுக்கு நடவடிக்கை இல்லை என்றால் சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்