சிறப்பாக சேவையாற்றிய செஞ்சிலுவை சங்க நிர்வாகிக்கு தேசிய விருது

சிறப்பாக சேவையாற்றிய செஞ்சிலுவை சங்க நிர்வாகிக்கு தேசிய விருதை கலெக்டர் விசாகன் வழங்கினார்.

Update: 2021-07-03 19:11 GMT
திண்டுக்கல்:
செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் சிறப்பாக சேவையாற்றும் ஒருவருக்கு தேசிய அளவில் விருது வழங்கப்படும். இந்த விருதுக்கு தகுதியானவர்கள் ஜனாதிபதி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் செஞ்சிலுவை சங்கம் மூலம் சிறப்பாக சேவையாற்றியவர்களில் விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அறிவிக்கும் கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இணையதளம் மூலம் நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் இணை செயலாளர் சையது அபுதாகிருக்கு தேசிய அளவில் விருது அறிவிக்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் விருது நேரில் வழங்கப்படாமல் திண்டுக்கல் சங்க அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சையது அபுதாகிருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி, சையது அபுதாகிருக்கு விருதை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் செஞ்சிலுவை சங்க திண்டுக்கல் மாவட்ட அவைத்தலைவர் நாட்டாண்மை காஜாமைதீன், துணை தலைவர் சரவணன், துணை அவைத்தலைவர் சேக்தாவூது, பொருளாளர் சுசீலா மேரி, ஆலோசகர் அருண் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்