கங்கைகொண்டானில் மினி டைட்டல் பார்க் அமைக்க நடவடிக்கை; அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

நெல்லை கங்கைகொண்டானில் மினி டைட்டல் பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Update: 2021-07-03 19:19 GMT
நெல்லை:
கங்கைகொண்டானில் ‘மினி டைட்டல் பார்க்' அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

கலந்தாய்வு கூட்டம்

நெல்லை மாவட்ட தொழில் வளர்ச்சிக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு வரவேற்று பேசினார்.
கூட்டத்தில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தொழில் நிறுவனத்திர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘நெல்லையில் சமையல் பாத்திரம் மற்றும் உபகரணங்கள் உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. இதை மேம்படுத்த தேவையான உதவிகள் செய்ய வேண்டும். நெல்லை மாவட்டத்தில் தாது மணல் தொழிலில் ஈடுபட்டிருந்த 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து உள்ளனர். எனவே அரசே நேரடியாக தாது மணல் ஆலைகளை நடத்த வேண்டும். தொழில் தொடங்குவது மற்றும் உரிமத்தை புதுப்பிப்பதில் ஒற்றை சாளர முறையை எளிமைப்படுத்த வேண்டும்.

முதன்மை மாநிலம்

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்துக்கு தொழிலாளர்கள் எளிதாக சென்று வர டவுன் பஸ்களை இயக்க வேண்டும். நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பேட்டரி இருசக்கர வாகனம், ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி, ராணுவ ஆடை உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும்’’ என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- 
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை தொழில் வளத்தில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று கூறிஉள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வருகிற நிறுவனங்களுக்கு தரும் சலுகைகளை, உள்ளூரில் தொழில் தொடங்கும் உள்ளூர் நிறுவனங்களுக்கும் தர வேண்டும் என்பதை தி.மு.க. அரசு கொள்கை முடிவாக எடுத்துள்ளது.

‘மினி டைட்டல் பார்க்’

கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்கா, நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கங்கைகொண்டானில் பெரிய தகவல் தொழில் நிறுவனங்கள் வராவிட்டாலும், 50 முதல் 100 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய நிறுவனங்களை கொண்டு ‘மினி டைட்டல் பார்க்’ உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் தொழிற்சாலைகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
நெல்லையில் சமையல் பாத்திரங்கள், உபகரணங்கள் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் தற்போது தொழில் தொடங்குவதற்கு நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே முதலீடு செய்ய பலர் முன்வருவதாக கூறிஉள்ளனர்.
விரைவில் தமிழகத்தில் சிறந்த தொழில் முதலீடுகளை கொண்டு தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் தமிழகம் தொழில் துறையில் சிறந்து விளங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன்

முன்னதாக அமைச்சர் தங்கம் தென்னரசு ரூ.26.88 லட்சம் மதிப்பிலான செல்போன்களை 210 பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும், பாளையங்கோட்டையில் மேடை போலீஸ் நிலையம் செயல்பட்டு வந்த பழங்கால கோட்டையை புதுப்பிக்கும் பணியையும், நரசிங்கநல்லூரில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் மற்றும் தொழில் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்