காளைக்கான நடுகல்லை வரலாற்று ஆவண சான்றாக பாதுகாக்க கோரிக்கை

சாலை விரிவாக்க பணிக்காக இடமாற்றம் செய்ய உள்ள காளைக்கான நடுகல்லை வரலாற்று ஆவண சான்றாக பாதுகாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-03 20:18 GMT
பெரம்பலூர்:

பழங்காலத்தில், இறந்த ஒருவரின் நினைவாக அவர் உருவம் பொறித்த கல்லையும், அதில் அவரைப்பற்றிய குறிப்புகளையும் குறிப்பிட்ட அளவில் சிற்பமாக வடிவமைத்து நடுவர். அவ்வாறு நடப்பட்ட கல்லினை தொடர்ந்து பல்வேறு படையல்கள் மூலமாக வழிபட்டு வருவது மரபு. அந்த வகையில் பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலையில் நாகலாபுரம் அருகே சாலை ஓரத்தில் காளை ஒன்றுக்காக உருவாக்கப்பட்ட நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெரம்பலூர் -துறையூர் இடையே சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக நடுகல்லை இடமாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நடுகல் குறித்து பெரம்பலூர் சூழலியல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா கூறுகையில், போரில் இறந்த வீரன் அல்லது ஏதேனும் ஒன்றை மீட்பதற்காக சண்டையிட்டு இறந்தவர், விலங்குகளுடன் சண்டையிடுதல் அல்லது சண்டையிட்ட விலங்குகள் ஆகியவற்றுக்கு கல் உருவாக்கி நடுகல்லாக வழிபட்டு வருகின்றனர். பொதுவாக வீரமரணம் அடைந்த வீரன், நாய், சேவல் போன்றவற்றுக்கு எல்லாம் நடுகல் சான்றுகள் உள்ளன. அதேபோன்று ஏறு தழுவுதல் நிகழ்வுக்கும் நடுகல் சான்று உள்ளது. ஆனால் இது காளை ஒன்றிற்காக உருவாக்கப்பட்ட நினைவுக்கல்லாக உள்ளது அபூர்வமான ஒன்றாகும். இதன் மூலம் நம் முன்னோர், தாம் விருப்பத்துடன் வளர்த்த காளை மாட்டிற்காக நடுகல் அமைத்திருப்பது வியப்பை அளிக்கிறது. விரைவில் இந்த நடுகல் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், இதனை வரலாற்று ஆவண சான்றாக பாதுகாக்குமாறு நெடுஞ்சாலை துறையினரை கேட்டுக்கொண்டுள்ளோம், என்றார்.

மேலும் செய்திகள்