பெற்றோர் குடிபோதைக்கு அடிமையானதால் விபசாரத்தில் தள்ளப்பட்ட சிறுமி கர்ப்பம்

பெற்றோர் குடிபோதைக்கு அடிமையானதால் விபசாரத்தில் தள்ளப்பட்ட சிறுமி கர்ப்பமானாள். இதுதொடர்பாக பக்கத்து வீட்டு பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-07-03 20:30 GMT
சிக்பள்ளாப்பூர்:
  
குடிபோதைக்கு அடிமை

  சிக்பள்ளாப்பூர் மாவட்டம் மஞ்சேனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட சந்தேனஹள்ளி கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 14 வயதில் மகள் உள்ளாள். இந்த நிலையில், கணவன்-மனைவி இருவரும் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர்கள் தினமும் மது அருந்திவிட்டு குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளனர். மேலும், தங்கள் மகளான 14 வயது சிறுமியையும் அவர்கள் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

  இந்த நிலையில், அவர்களின் வீட்டின் அருகே துமகூரு மாவட்டம் மதுகிரியை சேர்ந்த கவுரி என்பவர் குடி வந்துள்ளார். அந்த பெண்ணால், 14 வயது சிறுமியின் வாழ்க்ைகயே தடம் புரண்டது. தாயும், தந்தையும் குடிபோதையில் தகராறு செய்வதால் மனமுடைந்து இருந்த சிறுமிக்கு, துணையாக இருப்பதாக கவுரி ஆறுதல் வார்த்தைகளை கூறியுள்ளார்.

மூளை சலவை

  பெற்றோரால் மனமுடைந்து காணப்பட்ட சிறுமி, கவுரியின் ஆறுதல் வார்த்தைகளால் அவரை முழுமையாக நம்பி உள்ளார். சிறுமி தன்னை நம்புவதையும், அவளது பெற்றோர் தினமும் குடிபோதையில் திளைப்பதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கவுரி, தனது சுயரூபத்தை காட்டி உள்ளார். அதாவது கவுரி, சிறுமியிடம் ஆறுதலாக பேசுவது போன்று அவளை விபசாரத்தில் ஈடுபடுத்த தூண்டி உள்ளார்.

  பெற்றோர் குடிபோதையில் தகராறு செய்வதை மறந்து, விபசாரத்தில் ஈடுபட்டால் அதிக பணம் கொடுப்பதாகவும், அதன் மூலம் சந்தோஷமாக இருக்கலாம் என்றும் சிறுமியை கவுரி மூளை சலவை செய்துள்ளார். இவ்வாறு ஆறுதல் வார்த்தை கூறுவது போன்று சிறுமியை மூளை சலவை செய்து, அவளை கவுரி விபசாரத்தில் தள்ளி உள்ளார்.

விபசாரத்தில் தள்ளினார்

  கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அந்த சிறுமி, கவுரி மூலம் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன்மூலம் நாள்தோறும் கவுரி, அந்த சிறுமிக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை கொடுத்து வந்துள்ளார். அந்த பணத்தை சிறுமி தனது பெற்றோரிடம் கொடுத்து வந்துள்ளாள். அதன்மூலம் அவர்கள் மதுபானம் வாங்கி குடித்து வருகிறார்கள்.

  இதில் கொடுமை என்னவென்றால், அந்த சிறுமி விபசாரத்தில் ஈடுபடுவது அவளது பெற்றோருக்கும் தெரியும். பெற்ற மகள் விபசாரத்தில் ஈடுபடுவது தெரிந்தும், பணம் கிடைக்கிறது என்ற காரணத்திற்காகவும், மதுவும் தடையின்றி கிடைக்கிறது என்பதாலும் இதனை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கவுரி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறுமியை தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

5 மாத கர்ப்பம்

  இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால், அவர் சிக்பள்ளாப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன்காரணமாக, சிறுமியின் உறவினர்கள் அவளை தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில், உறவினர் வீட்டுக்கு ஆஷா ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளனர். சிறுமியையும் அவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதை ஆஷா ஊழியர்கள் கண்டறிந்தனர்.

  இதையடுத்து சிறுமியை, மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசில் டாக்டர்கள் புகார் கொடுத்தனர்.

5 பேர் கைது

  அதன்பேரில் போலீசார் சிறுமியை மீட்டு விசாரித்தனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி, போலீசாரிடம் தெரிவித்தாள். இதனை கேட்டு போலீசார் அதிர்ந்து போனார்கள். இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை விபசாரத்தில் தள்ளிய கவுரி, அவரது கூட்டாளிகளான மூர்த்தி, பஷீர், தேவா, வினோத் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார், குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோர் குடிபோதைக்கு அடிமையானதால் சிறுமி விபசாரத்தில் தள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாய்க்கு கொரோனா; தந்தை தலைமறைவு

சிக்பள்ளாப்பூரில் 14 வயது சிறுமி விபசாரத்தில் தள்ளப்பட்ட வழக்கில் அவளது பெற்றோருக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் போலீசார், சிறுமியின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்ததும் சிறுமியின் தந்தை தலைமறைவாகி விட்டார். 

சிறுமியின் தாய் கொரோனா பாதிக்கப்பட்டு சிக்பள்ளாப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனாவில் இருந்து குணமானதும் அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான சிறுமியின் தந்தையையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்