மதுபாட்டில்கள் பறிமுதல்

அதிராம்பட்டினம் அருகே காய்கறி- மீன்பெட்டியில் மறைத்து கடத்தப்பட்ட 162 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

Update: 2021-07-03 20:58 GMT
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினம் அருகே காய்கறி- மீன்பெட்டியில் மறைத்து கடத்தப்பட்ட 162 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். 
வாகன சோதனை
கொரோனா பரவல் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மதுக்கடைகள்  திறக்கப்படவில்லை. இந்தநிலையில் அதிராம்பட்டினம் கடலோர பகுதி வழியாக மதுகடத்தப்படுவதாக கடலோர காவல்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் பகுதி கடலோர பாதுகாப்பு குழும சோதனைச்சாவடியில் நேற்று மதியம் அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
162 மதுபாட்டில்கள்
அப்போது கட்டுமாவடியிலிருந்து திருவாரூர் மாவட்டம் பெத்தவேளாண்கோட்டகத்தை சேர்ந்த இளையராஜா(வயது37) மற்றும் நாகைமாவட்டம் கற்பகநாதர்குளம் பகுதியை சேர்ந்த நடராஜன்(48) ஆகிய இருவரும் தனித்தனியே இரண்டு இருசக்கர வாகனத்தில் காய்கறி மற்றும் மீன் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்தனர். போலீசார் அவர்களை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் காய்கறி பெட்டி மற்றும் மீன்பெட்டிக்குள் 162 மதுபாட்டில்கள் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
இந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இளையராஜா, நடராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 
 தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படாத நிலையில் மதுக்கடை இயங்காததால் இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் இருந்து மது பாட்டில்களை வாங்கி திருவாரூர் மற்றும் நாகை பகுதிக்கு விற்பதற்காக கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மது பாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.23 ஆயிரம் என கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்