8 வருடங்களுக்கு மேலாக செயல்படாமல் உள்ள நிறுவனங்களை மீண்டும் தொடங்க வேண்டும்

8 வருடங்களுக்கு மேலாக செயல்படாமல் உள்ள நிறுவனங்களை மீண்டும் தொடங்க வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-07-04 05:45 GMT
திரு.வி.க. நகர், 

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி வளாகத்தில் நேற்று தொழிற்பேட்டை அனைத்து உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தமிழ்நாடு சிட்கோ நிர்வாக இயக்குனர் கஜலட்சுமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புதிய சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து நடைமுறைபடுத்தி வருகிறது. எனவே கடந்த 5 முதல் 8 வருடங்கள் வரை செயல்படாமல் உள்ள நிறுவனங்களை மீண்டும் தொடங்குவதற்கு தொழில் முனைவோர் முன்வர வேண்டும். இல்லை என்றால் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய தொழில் முனைவோர்களுக்கு அரசு அனுமதி வழங்க ஆவண செய்யப்படும்.

தொழில் நிறுவனங்களை பதிவு செய்ய, பத்திரப்பதிவு கட்டணத்துக்கும் 6 மாதத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் கட்ட வேண்டிய வரி 6 மாதம் கழித்து கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறு குறு நடுத்தர தொழில்கள் பாதிக்காத வகையில் பல சலுகைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அம்பத்தூர் தொழிற்பேட்டையின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

மேலும் செய்திகள்