கிராம மக்கள் சாலை மறியல்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பட்டாவுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யக்கோரி அக்கிரமேசி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-09 16:29 GMT
நயினார்கோவில், 
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பட்டாவுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யக்கோரி அக்கிரமேசி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோரிக்கை
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் அக்கிரமேசி கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு விதிகளுக்கு உட்பட்டு வீட்டுமனை இடம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு மனு பரிசீலனை செய்யப்பட்டு அந்த பகுதியில் சுமார் 17.84 ஏக்கர் நிலம் அரசு விலைக்கு வாங்கப்பட்டு சுமார் 350 சீர்மரபினர் குடும்பத்திற்கு 2014-ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது. அரசின் சார்பில் வழங்கப்பட்ட பயனாளிகளிடம் தற்போது பட்டா உள்ளது. 
ஆனால் இன்னும் அதற்கான வீட்டு மனை ஒதுக்கி கொடுக்கப்படாமல் கடந்த 20 ஆண்டு காலமாக காலம் தாழ்த்தி வருவதாகவும் அரசு அதிகாரிகள் அவ்வப்போது வந்து நிலம் அளக்க பணம் பெற்றுக் கொண்டு நிலத்தை அளந்து தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சாலை மறியல்
இது தொடர்பாக பல முறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை என தெரிவித்து அக்கிரமேசி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடுக்கப்பட்ட பட்டாவுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதனால் அந்த பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்